Saturday 2 April 2011

இக்கரைக்கு அக்கரை

புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை


இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு


நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்


இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்


ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்


புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்


இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை


*****

4 comments:

  1. அடடா! அடடா! அருமையான நடையில் அன்பையும், ஆசையையும், சமூக அவலத்தையும் உணர்த்தும் எளிய கவிதை.

    தொடர்ந்து எழுதுங்களேன் கவிஞரே!

    ReplyDelete
  2. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நமக்கு சோறு தாங்க முக்கியம்... என்ன இருந்தாலும் வாழ்றது அந்த ஒரு ஜான் வயிற்ருக்கு தானே,,

    ReplyDelete
  4. அட அட அட என்ன ஒரு வாசனை உங்க கவிதைக்கும் அந்த கம்மஞ்சோறுக்கும். கலக்கல்.

    ReplyDelete