Tuesday 6 September 2011

நன்றாமோ தீது...


இப்போதெல்லாம் இதே போராட்டம்
கொஞ்சம் வளைந்து கொடு , உன்னைக்
கோபுரத்தில் ஏற்றுகிறேன் என்கிறது 'அறிவு'

ஒடிந்து போனாலும் , இதனால்
உயிர் ஒழிந்து போனாலும்
வளைந்து கொடுக்க வாய்ப்பே இல்லைஎன்கிறது 'மனது'
இப்போதெல்லாம் இதே போராட்டம்...

பழகாமல் இருந்திருக்கலாமோ!?
பழியெனின் உலகு உடன் பெறினும் கொள்ளார்

ஆமென்


கொஞ்சினோம் கொடுக்கவில்லை
கெஞ்சினோம் கிடைக்கவில்லை
தட்டினோம் தாழ் திறக்கவில்லை
திரும்பத் திரும்பத் தட்டினோம்
கைகள் காப்பேறின , இருந்தும்
கதவு மட்டும் திறக்கப்படவே இல்லை

பரலோக பரமபிதாவே
ஒருவேளை நீங்கள் இருந்தால்
எம்மையும் மன்னியும்

தட்டினால் திறக்கப்படாத கதவை
தகர்ப்பதென்று முடிவுசெய்து விட்டோம்

பொய்த்தேவு


கன்னடம்
தண்ணீர் தரட்டும்
நானும் திராவிடன்

இந்தியா
ஈழம் அமைத்துத் தரட்டும்
நானும் இந்தியன்

கானல்நீர் தாகம் தீர்க்காது
விட்டுவிடு
நான் தமிழன்